சென்னை: தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இசைக் கலைஞர்ளை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்திய நிகழ்ச்சியின் முழு காணொலி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கார் ஓட்டுவதில் அலாதி பிரியம், பேரக் குழந்தைகளுடன் டான்ஸ் என முதல்வர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘வைப் வித் எம்கேஎஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அதன்படி, முதல்கட்டமாக தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் ‘வைப் வித் எம்கேஎஸ்’ என்ற பெயரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். இதில் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது இளமைக்கால நினைவுகள், விளையாட்டு மீதான ஆர்வம், கிரிக்கெட் ஆர்வம் மற்றும் அரசியல் அழுத்தங்களைக் கையாளும் விதம் குறித்து அவர் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். விளையாட்டு வீரர்களின் கேள்விகளுக்கு புன்னகையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் ‘வைப் வித் எம்கேஎஸ்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோட்டில், தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இசைக் கலைஞர்ளை அழைத்து அவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக ட்ரெண்ட் ஆகியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், அவர் முன்னணித் திரை இசைக்கலைஞர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களுடன் இணைந்து பாடலைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் முழு காணொளி காட்சி இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் எபிசோடில் விளையாட்டு வீரர்களுடன் உற்சாகமாக உரையாடிய முதல்வர், இந்த முறை தமிழ் திரையுலகின் முன்னணி இசை நட்சத்திரங்களுடன் இணைந்து கலகலப்பாக நேரத்தைச் செலவிட்டுள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் அந்தோணி தாசன், கானா முத்து, சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மற்றும் இசையமைப்பாளர் தென்மா ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
அரசியல் மேடைகளில் சீரியஸாகப் பேசும் முதல்வரைத் தவிர்த்து, ஒரு சாதாரண மனிதராக அவரிடம் இருந்த கலை ஆர்வத்தை இந்த நிகழ்ச்சி வெளிச்சமிட்டுக் காட்டியது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முதல்வர் கூறுகையில், ‘‘தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். உட்லேண்ட்ஸ் ஓட்டலுக்கு சென்றிருந்தோம். அப்போது கலைஞர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் என்னை அழைத்துப் போய் எதிரே இருக்கும் கப்பன் பார்க்கில் ‘பியட் செலக்ட்’ காரில் எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். நான் இப்போது தான் முதல்வராக வந்த பிறகு, கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன். தொல்காப்பிய பூங்காவுக்கு தினமும் நடைபயிற்சிக்குப் போவேன். அப்படி நடைபயிற்சி போகும்போது வண்டியை (கார்) எடுத்து வந்தார்கள். வண்டி நல்லா இருந்தது. சரி ஓட்டிப் பார்க்கலாம் என்று வீடு வரை ஓட்டிக் கொண்டு போனேன்.
பழைய கார் மேல் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. கோவையில் பழைய கார்களை நல்லா பராமரித்துக் கொண்டிருப்பார்கள். கோவைக்கு போய் கார் வாங்கிக் கொண்டு இங்கே வந்து ஒரு 6 மாதம், 7 மாதம் ஓட்டுவேன். அதற்கு பிறகு விற்றுவிட்டு, மறுபடியும் பழைய கார் வாங்கப் போவேன். இளைஞரணியில் நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழிநாடு முழுவதும் 5, 6 பேர் குழுவுடன் சுற்றுப் பயணம் போனேன். அப்படி போகும்போது டிரைவரை அடுத்த வண்டியில் வரசொல்லிவிட்டு, நான் தான் வண்டி ஓட்டிக்கொண்டு போவேன். அதிலும் இரவில் வண்டி ஓட்டுவதில் எனக்கு ரொம்ப பிரியம், என்னை நம்பி எல்லாரும் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். டிரைவரை கார் எடுத்து திருப்பிவிடுவது, துடைத்து வைப்பது இதற்கு தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். ஒரு நாள் டிரைவர் வேடிக்கையாக சொன்னார், சார் நான் கார் ஓட்டுவதையே மறந்துவிட்டேன், அதனால் நான் எங்காவது வேலைக்கு போகிறேன் என்று சொன்னார். அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது.” என்று சுவாரசியமாகப் பேசினார்.
அப்போது ஸ்டீவன் சாமுவேல் என்ற இசைக் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ‘‘சார் நீங்கள் கார் ஓட்டும்போது உங்களுக்கு பிடித்த பாட்டு எது? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “அப்போது டி.டி.கே என்று ஒரு கேசட் வரும். அதில் ரெக்கார்டு செய்து விடுவேன். நான் பெரும்பாலும் பழைய பாடல் தான் கேட்பேன். அதில் அதிகமாக நான் கேட்பது எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள் கேட்பேன். எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் படத்தின், ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா… ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பாடலைக் கேட்பேன். ‘நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை.’ சுசிலாவின் பாட்டு அதைக் கேட்பேன்.” என்று கூறினார். அப்போது பாடகி பிரியங்கா, “நீ இல்லாத உலகத்தில்… பாடலை இரண்டு வரி எங்களுடன் சேர்ந்து பாடுவீர்களா?” என்று கேட்டார். உடனே, முதல்வர் சரி என்று கூறி, “நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை… உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை… காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை. உனைக் கண்டு கொண்ட நாள் முதலா பெண்ணுறங்கவில்லை.” என்று சேர்ந்து பாடினார். அதே போல, ஐக்கி பெர்ரி என்ற இசைக் கலைஞர், “நீங்கள் எந்த பாட்டைக் கேட்டு ஜாலியாக என்ஜாய் பண்ணுவீங்க” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்” என்ற பாடலைப் பாடினார்.
இந்த பாடல் முழுவதும் தெரியும் இப்போது வேண்டாம் என்று 2 வரிகளை மட்டும் பாடினார்.
பேரன் பிள்ளைகளோடு சேர்ந்து பாடல்கள் கேட்பீர்களா என்று மதன் கார்க்கி கேட்டதற்கு, முதல்வர் “ஆம் கேட்டிருக்கிறேன். அவர்களோடு டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறேன்.” என்று கூறினார். டி.ஆர். மகாலிங்கம் பாடலான திராவிட பொன்னாடே கலைவாழும் தென்னாடே என்ற பாடலை மிக ரசித்து கேட்பேன் என்று கூறிய ஸ்டாலின், “தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள், இப்போது மியூசிக் ஓவராக இருப்பதால் பாட்டு கேட்க முடியாமல் போகிறது.” என்று கூறினார். இளையராஜாவின், “தென்பாண்டித் தமிழே” பாடல் ரசித்துக் கேட்பேன் என்று கூறிய முதல்வர், ஏ.ஆர். ரகுமான் பாடலையும் கேட்பேன் என்று கூறினார். ‘‘எனக்கு மூடு அவுட் ஆனால் பாட்டு கேட்பேன். டென்ஷன் ஆனால் பாட்டு கேட்பேன். நிச்சயமாக தூங்கப் போகும் போது பாட்டு கேட்பேன். அதுவும் பழைய பாடல் தான் கேட்பேன் என்று கூறிய முதல்வர், தனக்கு பிடித்த பாடகர் டி.எம்.எஸ். அவர் தான் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற மாதிரியும் சிவாஜிக்கு ஏற்ற மாதிரியும் பாடல்கள் பாடுவார்’’என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, பாடகர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, டி.எம்.சவுந்தரராஜன் மற்றும் பி.சுசீலா பாடிய காலத்தால் அழியாத பாடலான, ”நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை… உன் நினைவில்லாத இதயத்திலே ஜீவன் இல்லை…” என்ற பாடலின் வரிகளைப் பாடகர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடினார். நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கானா பாடகர்களின் திறமையை முதல்வர் வெகுவாகப் பாராட்டினார். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் உரையாடினார்.
