இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசியதாவது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் மண்டல அளவிலான வல்லுநர் குழுவும், மாநில அளவிலான வல்லுநர் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அளவிலாள வல்லுநர் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 16.11.2021 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை வல்லுநர் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு திருக்கோயில்களின் திருப்பணிக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் மூலம் அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப்பட்டு, மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும் திருப்பணிகளுக்கான ஆணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள் பதிவிறக்கம் செய்திடவும், திருப்பணிகளுக்கான மதிப்பீடுகளை விரைவாக தயார் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 99 கூட்டங்களில் வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் ரூ.2,384.24 கோடி மதிப்பீட்டில் 12,960 பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 2,679 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது பெருமைக்குரிய சாதனையாகும். இச்சாதனை தொடரும்.மாநில வல்லுநர் குழுவின் 100-வது கூட்டம் நடைபெறும் இந்நாளில் தமிழ்நாடு மட்டுமன்றி, ஒன்றிய அளவில், உலகளவில் துறைக்கு பெருமை சேர்த்து தந்திருக்கும் மாநில வல்லுநர் குழு உறுப்பினர்களான முனைவர் சிவ.ஸ்ரீ. கே.பிச்சை குருக்கள், கே.சந்திரசேகர பட்டர், கே.முத்துசாமி, சீ.வசந்தி, இராமமூர்த்தி, முனைவர் டி.சத்தியமூர்த்தி, முனைவர் கே.தட்சிணாமூர்த்தி, அனந்த சயன பட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர்.
இராஜவேல், .ஆர்.கோவிந்தன், சு.ஜானகி ஆகியோருக்கும், இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர்கள், தலைமைப் பொறியாளர், இணை ஆணையர்கள் ஆகியோருக்கும் எனது சார்பிலும், துறையின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்கோயில்களில் மணியோசையும், தீப, தூப ஆராதனைகளும், தேவார, திருவாசகங்கள் பாடப்பட்டும், மங்களகரமான நாட்களில் கலசங்களில் புனித நீர் விழ வேண்டும். அதற்கு உங்களுடைய பணி தொடர வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் சி.பழனி, இ.ஆ.ப., ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையர்கள் பொ.ஜெயராமன், ச.லட்சுமணன், கோ.செ.மங்கையர்க்கரசி, இரா.வான்மதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 100 வது கூட்டம்: உறுப்பினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.
