மகளிர் தின சிறப்பு தொகுப்பு
பெண் இது சாதாரண வார்த்தை அல்ல. இந்த பிரபஞ்சத்தையே குறிக்கும் வார்த்தை என்றும் கூறலாம். பெண்ணின்றி இந்த உலகத்தில் மனிதர்கள் கிடையாது. இன்று சர்வதேச பெண்கள் தினம். இந்த தினத்திற்கு என ஒரு மகத்துவம் உண்டு. பல்வேறு தினங்களை வெகு விமர்சையாக நாம் கொண்டாடினாலும் அன்னையர் தினம், மகளிர் தினம் போன்ற பெண்களுக்கு உரித்தான தினங்களை பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறோம். சர்வதேச மகளிர் தினம் என்பது சாதாரணமாக கிடைக்கப்பெற்ற ஒரு தினம் கிடையாது. அவர்களது உரிமைக்காக பல வருடங்களாக போராடி அந்த உரிமையை மீட்டெடுத்த தினம் என்று கூட கூறலாம். அதன்படி, மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் எப்படி வந்தது என்பதை சற்று பின்னோக்கி பார்த்தால் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே என அவர்களை முடக்கி வைத்திருந்தனர்.
அந்த நிலை சற்று மாறி 1850களில் சில அலுவலகங்களில் பெண்கள் கால் பதிக்க தொடங்கினர். அப்போது அவர்களுக்கு ஊதியத்தில் மிகப்பெரிய முரண்பாடு காணப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் ஆண்களுக்கு அதிக ஊதியமும் பெண்களுக்கு குறைவான ஊதியமும் வழங்கப்பட்டது. அப்போது சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த ஒரு செய்தி பரிமாற்றங்களும் இல்லாத காலகட்டம். அப்போது பெண்கள் அனைவரும் கைகோர்த்து தங்களது ஊழியத்திற்காக போராடத் தொடங்கினர். அப்போது, ஜெர்மனியை சேர்ந்த புரட்சி பெண் கிளாரா ஜெட்கின் என்பவர் பெண்களின் உரிமைக்காக பெண்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவர் பெண்களின் உரிமைக்காக பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என கருதினார். அதுகுறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் தங்களுக்கு ஏற்றார் போல் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தனர். அதற்குப் பின்னர் 1917ம் ஆண்டு ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சியின் காரணமாக பல்வேறு சீர்திருத்தங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டன. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சி கவிழ்ந்தது என பல்வேறு வரலாற்றுச் சான்றிதழ்கள் கூறுகின்றன. 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா கேலன்ரா என்ற புரட்சி பெண் கலந்து கொண்டார். இந்த ரஷ்ய தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.
அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் விதவிதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் மகளிர் தினத்துக்கு முந்தைய, பிந்தைய என ஒரு மாதங்கள் வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு சாதனைகளை புரிந்த பெண்களுக்கு இந்த நாளில் கவுரவம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூகத்தில் பல்வேறு தடைகளை தாண்டி வெற்றிகளைக் கண்ட பெண்கள் பலர் உள்ளனர். அவர்களில் வடசென்னையை சேர்ந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகள் உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் ஈர்த்து உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம், புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மேகபுப் பாஷா மும்தாஜின் மகள் தான் இந்த காசிமா (18). இவர் தனது ஆறு வயதிலிருந்து கேரம் விளையாட்டில் ஈடுபட்டு ஆர்வமுடன் விளையாடி வருகிறார்.
படிப்படியாக பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய காசிமா தனது தந்தையுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று கேரம் விளையாட்டில் சாதனைகளை படைத்து வந்துள்ளார். தேசிய அளவிலான கேரம் போட்டிகளில் 10 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் கலிபோர்னியாவில் 18 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட காசிமா சீனியர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழக அரசு இவரின் திறமையை பாராட்டி ஒரு கோடி ரூபாய் பரிசளித்தது. சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகளாக இருந்தாலும் பல்வேறு தடைகளை தாண்டி வடசென்னை பெண் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளார் என்றால் அவரது உழைப்பையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பையும் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.
உயிரிழந்தவர்களின் உடல்களை சலிக்காமல் 14 வயதிலிருந்து எடுத்து அதனை அடக்கம் செய்யும் பணியில் ஒரு பெண் ஈடுபட்டு வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இதுவரை 15,000க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார் ஒரு பெண். ஆம், சாந்தோம் டுமில் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரோஜா (40), எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பைண்டிங் பிரஸ்சில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ராஜேஷ், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். ரோஜாவிற்கு 14 வயது இருக்கும் போது ஒரு கோயில் திருவிழாவில் ஒருவர் இறந்து போய் உள்ளார். அவரை அடக்கம் செய்ய யாரும் முன் வரவில்லை. அப்போது ரோஜா போலீசாரின் அனுமதியோடு அந்த உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு எங்கெல்லாம் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் இல்லையோ அதுபோன்ற இடங்களில் இருந்து தொடர்ந்து ரோஜாவிற்கு அழைப்புகள் வந்துள்ளன.
ரோஜாவும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல்களை அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இது காலப்போக்கில் அதிகரித்து ரோஜா என்பவர் அனைவராலும் ரோஜா அம்மா என அழைக்கும் நிலைக்கு வந்துள்ளார். இதுவரை சுமார் 15,000 மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார் ரோஜா. ரோஜாவிற்கு சிறுவயதில் அம்மா இறந்து விட்டார். அதன் பிறகு அவரது தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார். தாயின் அரவணைப்பு கிடைக்காத ரோஜா உறவினர்கள் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இதனால் தான் ஒரு அனாதை மாதிரி தான் வளர்ந்தேன். அதனால் யாரும் அனாதை மாதிரி சாகக்கூடாது, அதனால் தான் இந்த தொழிலை விரும்பி செய்து வருகிறேன் என பெருமையோடு கூறுகிறார். இதுகுறித்து ரோஜா கூறுகையில், ‘சிறுவயதில் ஆரம்பத்தில் ஒரு விபத்தாக இந்த வேலையை செய்தேன். அதன் பிறகு அதுவே பழகிவிட்டது.
செல்போன் பயன்பாடுகள் வந்த பிறகு எங்கு அனாதை பிணங்கள் இருந்தாலும் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு கூறுகிறார்கள். நான் அங்கு சென்று போலீசாரின் உதவியோடு உடல்களை அடக்கம் செய்து வருகிறேன். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 உடல்களையாவது அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தோம். ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு குறைந்தபட்சம் 4,000 வரை தேவைப்படும். எனது நண்பர்கள் பெரிய அளவில் எனக்கு உதவி செய்து வருகின்றனர்,’ என்றார்.
எந்த துறையிலும் சாதிக்கலாம்…
சர்வதேச மகளிர் தினம் குறித்து ரோஜா கூறுகையில், ‘‘பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் அவர்களால் முடியாதது எதுவும் கிடையாது. கல்வி ஒரு பெண்ணிற்கு முக்கியமான ஒரு விஷயம்தான். ஆனால் அது மட்டுமே அனைத்தையும் கொடுத்து விடாது. பெண்கள் தைரியமுடன் இருக்க வேண்டும். தனது மனதை ஒருநிலைப்படுத்தி கட்டுப்பாடுடன் இருந்தால் எந்த ஒரு துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்’’ என்றார்.
தேவை முழு சுதந்திரம்…
கேரம் உலக சாம்பியன் காசிமா கூறுகையில், ‘‘கேரம் போட்டியில் உலக கோப்பையில் வெற்றி பெறுவது என்பது எனது கனவு. அது நிறைவேறி உள்ளது. இதற்கு எனது தந்தை, அண்ணன், குடும்பத்தினர் பக்கபலமாக இருந்துள்ளனர். பெண்கள் எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க முடியும், பெண்கள் சாதிக்க விரும்பினால் அவர்களது வீட்டில் உள்ள குடும்பத்தினர் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்றார்.
The post அவளின்றி அணுவும் சையாது: சிகரம் தொட்ட பெண்கள் appeared first on Dinakaran.