சுகாதார நிலையத்தில் இரவு நேரப் பணியில் மருத்துவர் அடிக்கடி இல்லாமல் இருப்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலம் தொடர் கதையாகி உள்ளது.
குறிப்பாக பணியில் இருக்கும் செவிலியர்கள், ஸ்ரீவைகுண்டம் அல்லது நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதாக இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த வாரத்தில் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காய்ச்சல் காரணமாக இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்த போது மருத்துவர்கள் இல்லை என்று கூறி செவிலியர்களே மருந்து, மாத்திரை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாமக மாநில துணை தலைவர் கசாலி கூறுகையில், ‘கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரப் பணியில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது பெரும் சர்ச்சையாக உள்ளது. கருங்குளம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சுமார் 25,000 பேர் வசிக்கக் கூடிய பகுதியாகும்.
இங்கு ஒரு மருத்துவருடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றால் மருத்துவர் இல்லை என திரும்பி வர வேண்டியுள்ளது.
கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருவர் மட்டுமே மாறி மாறி பணி செய்கின்றனர். மீதமுள்ள 4 மருத்துவர்கள் வேறு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் பணியிடத்தில் டெப்டேஷனில் பணி செய்கிறார்களா? என்பது குறித்து முறையான தகவல் அளிக்க வேண்டும்.
கருங்குளம் சுகாதார நிலையத்திற்கு விபத்து, மகப்பேறு சிகிச்சைக்கு சென்று நெல்லை அல்லது ஸ்ரீவைகுண்டத்துக்கு அனுப்பி வைக்கும்போது உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே முறையாக பணியமர்த்தப்பட்ட 6 மருத்துவர்களும் பணியில் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து இரவு நேரத்தில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
The post கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர் பணியில் இல்லாததால் நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.
