ஆரணி, மார்ச் 4: ஆரணி டவுன் பழைய ஆற்காடு சாலை அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றின் குறுக்கே ஆற்காடு-விழுப்புரம் சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைத்து தரகோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். நெடுஞ்சாலைதுறை திட்டங்கள் அலகின் துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024ம் ஆண்டு கி.மீ 25/8 ல் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட ₹19,20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் இயக்குநர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, உயர்மட்ட பாலப்பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. அதனால், ஒப்பந்தாரர் உரிய ஒப்பந்த காலத்திற்குள்ளாக பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், திருவண்ணாமலை தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் சரவணன், விழுப்புரம் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் காந்த், வேலூர் திட்டங்கள் கோட்ட பொறியாளர் சுந்தர், போளூர் கோதண்யா குருப்பஸ் ஒப்பந்தார் மணிகண்டன், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு ஆற்காடு-விழுப்புரம் சாலையில் appeared first on Dinakaran.