திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, அதனை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.

அதில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கார்த்திகேயன்(திமுக) மணிகண்டன்(அதிமுக), தங்கராஜ்(கம்யூனிஸ்ட்) நியூட்டன் (விசிக), காளிங்கன் (தேமுதிக) உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கின் சீல், கலெக்டர் தர்ப்பகராஜ் முன்னிலையில் அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, மீண்டும் பாதுகாப்பு கிடங்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதோடு, 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குமரன், தாசில்தார் சாப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: