திருவண்ணாமலை, மார்ச் 8: கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்ட பணிகளையும் தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ், ஆரணி தொகுதி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன் ஓ.ஜோதி, மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மக்களும் பயனடையும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார். இத்திட்டங்கள் அனைத்தும், கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றுவது ஊரக வளர்ச்சித்துறையினரின் முக்கிய பணியாகும். மேலும், திருவண்ணாமலை மாவட்டம் 860 ஊராட்சிகளை கொண்ட மிகப்பெரிய மாவட்டம். மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை.
குறிப்பாக, குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், தெரு விளக்குகள், சுகாதாரப்பணிகள், சமத்துவபுரம் வீடுகள் கட்டும் பணிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3114 வீடுகள் கட்டும் பணிகள், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்ட பணிகள், அரசு பள்ளிகளில் சுகாதார மேம்பாடு பணிகள் போன்றவை முறையாக நடைபெறுகிறதா என்பதை தனி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறைகளின் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் அனைத்தும் எவ்வித தொய்வின்றி விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம் தாசில்தார்களுக்கு புதிய அரசு வாகனங்களை கொடியசைத்து அமைச்சர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஆர்டிஓ செந்தில்குமார், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், ஊராட்சி உதவி இயக்குநர்கள் வடிவேலன், வேல்முருகன் மற்றும் முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்டப்பணிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.