2026 தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுக அபார வெற்றி பெறும்: நடிகர் வடிவேலு உறுதி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், “மக்கள் முதல்வரின் மனிதநேய விழா” என்னும் தலைப்பில் யானைகவுனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. வட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வைத்தார். மேயர் பிரியா, நடிகர்கள் குட்டி பத்மினி, அஜய் ரத்தினம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியதாவது:

இன்றைக்கு விமர்சனங்கள் என்ற பெயரில் பல பந்துகள் வந்தாலும் அதனை சிக்சர் அடிக்கிறார் முதல்வர். முதல்வர் வழியில் மக்களுக்காக எல்லா நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார் துணை முதல்வர். கிளி, நாய், பசு அதன் தாய்மொழியில்தான் கத்துகிறது. அவைகளை வேறு மொழியில் கத்த சொன்னால் கத்தாது. தற்போது தமிழ்மொழிக்கு ஆபத்து வந்துள்ளது. யார், யார் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்த மொழியையும் திணிக்க கூடாது. தமிழ்நாட்டின் அடையாளம் தமிழ்தான். மொழிக்காக உயிரையே கொடுப்பேன் என உரைத்த முதல்வர், யாரையும் எதையும் திணிக்கவும் புகுத்தவும் அனுமதிக்க மாட்டார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், துறைமுகம் தொகுதி பொறுப்பாளர் நரேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம், ஆசாத், ராஜேஷ் ஜெயின் மற்றும் கலைச்செல்வி ஷேக் அப்துல்லா, எம்.இ.கனி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். முத்து நன்றி கூறினார்.

The post 2026 தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுக அபார வெற்றி பெறும்: நடிகர் வடிவேலு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: