அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம்

அரியலூர், பிப்.28: அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக நேற்று திறந்துவைத்தார். அரசு கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை (Tamil Nadu State Policy for Care of Homeless Persons with Mental Illness and Implementation Framework) வெளியிட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

அதன்படி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தையும் முதல்வர் காணாலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்துவிளக்கேற்றி வைத்து, ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மருத்துவ பணியாளர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இம்மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், சிகிச்சை பெறும் நபர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட படுக்கைகள், உள்விளையாட்டு உபகரணங்களான சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் லுுயி கதிரவன், நகரச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் லதா பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருள்ராஜா, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலர் கொளஞ்சிநாதன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: