3 மாவட்ட மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி தொடக்கம் படிக்கும்போதே திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

*டிஆர்ஓ அறிவுரை

வேலூர் : படிக்கும்போதே திறமைகளை வளர்த்துக்கொண்டு பாதையை வகுத்து பயணிக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் டிஆர்ஓ மாலதி பேசினார்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு சாரா குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

2 நாள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பின் முதல் நாளான நேற்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குழந்தைகள் இல்லங்களில் தங்கி பயிலும் 14வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட 240க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை டிஆர்ஓ மாலதி தொடங்கி வைத்து பேசியதாவது:

பள்ளி படிப்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகள்தான் முக்கியமானது. அதுதான் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் உங்கள் எதிர்காலமும் அமைகிறது. நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பதை அறிந்து பயணிக்க வேண்டும். படிக்கும்போதே திறமைகளை வளர்த்துக்கொண்டு பாதையை வகுத்து பயணிக்க வேண்டும்.

எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து இங்கு வழங்கப்படும் பயிற்சி உதவியாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நீங்கள் அடுத்த நிலைக்கு செல்ல இப்பயிற்சி உதவும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்ஜித், குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம், நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 3 மாவட்ட மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி தொடக்கம் படிக்கும்போதே திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: