காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.44 கோடியில் நலத்திட்ட பணிகள்: எம்எல்ஏ, எம்பி தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை எழிலரசன் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் சார்பிலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், கீழம்பி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், திருப்புட்குழி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, முசரவாக்கம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்,

ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டிடம், விஷார் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், கீழ்கதிர்பூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.12 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் என பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடந்து, நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.42 கோடி செலவில் கீழம்பி புறவழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியினையும் தொடங்கி வைத்தனர். மேலும் திருப்புட்குழி, முசரவாக்கம், மேல் ஓட்டிவாக்கம், விஷார் உள்ளிட்ட கிராமங்களில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயின்று பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ – மாணவிகளுக்கு, கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு பைகளை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.44 கோடியில் நலத்திட்ட பணிகள்: எம்எல்ஏ, எம்பி தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: