ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா? அன்புமணிக்கு காங்கிரஸ் எம்பி சுதா கடும் கண்டனம்

சென்னை: மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் சுதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கும்பகோணத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் பேசுவதை விட்டு விட்டு, தேவையில்லாமல் என்னைப் பற்றி பேசும் போது, இந்த தொகுதிக்கு சம்மந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார் என்றும், தெரியாமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றும் பேசியது, தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசியதன் மூலம் நீங்கள் யார், நீங்கள் பெண்களை எந்த அளவிற்கு மதிக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இதுதான் உங்களது பண்பும் கூட. சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் போட்டியிடலாம். சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாக குடியேறிய நான் மயிலாடுதுறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா? வன்னியர் மக்கள் நலனுக்காக பாடுபட்டு, தனது சொத்தை இழந்து, பல வழக்குகளை எதிர்கொண்டு, சிறை சென்று, பல வன்னியர் அறிவார்ந்த பெருமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தும், மருத்துவர் ராமதாஸ் மகன் என்ற ஒரு தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத நீங்கள், கொல்லைப்புறம் வழியாக ஒன்றிய அமைச்சரானவர் தானே!

அதேசமயம், ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி செய்த போது தான் வன்னியர்களுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை மத்திய கேபினட் அமைச்சராக்கினார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நீங்கள் விதிமுறைகளை மீறி இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்ததாகவும், அதற்காக உங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு இருப்பதாகவும் ஊடகத்தின் வாயிலாக காண முடிந்தது. பெண் என்றும் பாராமல் இதுபோன்று பொதுக்கூட்டத்தில் நக்கலாக பேசுகிறீர்கள் என்றால் ஒரு கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்பை நீங்கள் பெறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா? அன்புமணிக்கு காங்கிரஸ் எம்பி சுதா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: