சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கிளப்பின் குதிரை பந்தயம் சுற்றுப்பாதை இடத்தில் 147 ஆண்டுகளுக்கு முன்பு கோல்ப் மைதானம் அமைக்கப்பட்டது. கோல்ப் மைதானத்தை மெட்ராஸ் ஜிம்கானா அமைப்பு நிர்வகித்து வருகிறது. ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்ட 160 ஏக்கர் நிலத்தை குத்தகையை ரத்து செய்தது தமிழக அரசு. இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கோல்ப் மைதானத்தில் ஹோல்கள் தோண்டக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கோல்ப் மைதானம் சேதம் அடைந்திருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜிம்கானா கிளப் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில் 1951 ஆம் ஆண்டு கோல்ப் மைதானம் அருகிலேயே மனமகிழ் மன்றம், சமையல் அறை என பல வசதிகள் அமைக்கப்பட்டு அங்கு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழமையான 3வது கோல்ப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்ல கூடிய நுழைவு வாயிலை அரசு சீல் வைத்துள்ளது.
சீல் வைப்பதற்கு முன்பு தங்கள் தரப்பில் விளக்கத்தை அளிப்பதற்கு அவகாசம் தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கோல்ப் மைதானத்துக்குள் நீர்நிலை அமைப்பதற்கான தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால் அதனை சரி செய்வதற்கு 50 லட்சம் வரை செலவாகும் என்பதால் அரசு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் அரசு நிலம் என்பது ரேஸ் கிளப்பிற்கு தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் அரசு மேற்கொள்ளக்கூடிய பணிகளுக்கு தடை கேட்டு ஜிம்கானா தரப்பில் மனு தாக்கல் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் கோல்ப் மைதானம் அமைந்துள்ளதால் நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முன்பு ஜிம்கானா கிளப்பிற்கு எந்த நோட்டீசும் அளிக்க அவசியம் இல்லை என்ற கருத்தை தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.