12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான குடியரசுத்தலைவரின் சமுக வலைதள பதிவில்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மிர்சாபூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
The post பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற கார் பேருந்து மீது மோதிய விபத்தில் 10 பேர் பலி: குடியரசுத தலைவர் இரங்கல் appeared first on Dinakaran.