நாகர்கோவில், பிப். 14: குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று காலை பார்வதிபுரம் பகுதியில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கார் ஷோரூம் அருகே சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நின்றது. அதனை போலீசார் பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல நேற்று முன்தினம் போலீசார் லாயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2 டாரஸ் லாரி டிரைவர்கள், ஒரு காருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அதேபகுதியில் வந்த டாரஸ் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, லாரி டிரைவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுபோல் நேற்றும், நேற்று முன்தினமும் 2 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மாவட்டம் முழுவதும் 417 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 417 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
