பெரம்பலூர்,டிச.19: பெரம்பலூர் பாலக்கரை அருகே நீர்வழி பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட காங்கிரீட் கட்டிடம் சென்றை ஐகோர்ட் உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது. பெரம்பலூர் நகரத்தின் முக்கிய சாலையான துறையூர்-பெரம்பலூர் சாலையில், பாலக்கரை பாலத்தின் வடபுறம் நீர்வழிப் பாதையின்மேல் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கீரிட் தளம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.
நீர்வழிப்பகுதியை பாதுகாக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையால், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றதை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர்கள் ராஜா, விக்னேஷ், தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
