புதுக்கோட்டை, டிச.19: புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்களில் 33,199 மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர் என மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் திட்டம் 02.08.2025 அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைவர் முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 23 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. சராசரியாக ஒவ்வொரு முகாமிற்கும் 1400-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். மொத்தம் 33,199 மருத்துவ பயனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
நாளை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமானது 2-இடங்களில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை வட்டாரத்தில், வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கியில் திருவரங்குளம் வட்டாரத்தில், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு மருத்துவ முகாமிலேயே பயனாளிகளிள் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும். அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்ரே எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
இம்முகாமில் பங்கு கொள்ளும் மருத்துவ பயனாளர்களுக்கு 17 சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன் முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், ஸ்கேன், எக்கோ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன.
இம்முகாமில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதால், பொது மக்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு முழுஉடல் பரிசோதனைகள் மேற்கொண்டும், சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
