மக்கள் தொடர்பு திட்ட முகாம்; 236 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்


மதுராந்தகம்: மலையான்குளம் கிராமத்தில் நடந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 236 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர் வழங்கினார். உத்திரமேரூர் வட்டம், மலையான்குளம் கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியர் மிருளாணி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடும்ப அட்டை, சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, தையல் இயந்திரம் மற்றும் பட்டா என பல்வேறு துறைகள் சார்பாக நல திட்ட உதவிகள் மொத்தம் 236 பயனாளிகளுக்கு 4 கோடியே 88 லட்சத்தி 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘அரசு எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் விவசாயிகள் மிகுந்த லாபம் அடைந்து வருகின்றனர்.

இதனால், அவர்கள் மகிழ்ச்சியுற்று இருக்கின்றனர்’ என்றார். மக்கள் தொடர்பு திட்ட முகாமினை ஒட்டி பல்துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட கவுன்சிலர் சிவராமன், கவுன்சிலர்கள் கல்யாண சுந்தரம், அன்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்த முரளி, துணை தலைவர் குழந்தைவேலு, ஒன்றிய பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

The post மக்கள் தொடர்பு திட்ட முகாம்; 236 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: