சென்னை: ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்காபோர் காரணமாக உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் லோடுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து பிரதான வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தி ஈரான் மூடியது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் வரமுடியாமல், ஓமன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக சமையல் எரிவாயு சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டன.
மேலும் வர்த்தக சிலிண்டர் என்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் இல்லாமல் சிறிய டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை இந்த பாதிப்பு என்பது இருந்து வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் முழு அளவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்களில் உள்ள மெனுக்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. குறைவான அளவிலேயே உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான கடைகள் விறகு அடுப்புக்கு மாறியுள்ளன. வர்த்தக சிலிண்டர் வராத வரை ஓட்டல்கள் ஒழுங்காக இயங்க வாய்ப்பில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் ஒரு புறம் இருக்க சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயர போவதாகவும், தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும் கடந்த 11ம் தேதி இரவு நள்ளிரவு ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது வதந்தி என்று தெரிந்தும் கூட கடந்த 11ம் தேதி இரவு முதல் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கை நோக்கி படையெடுக்க தொடங்கினர். சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த நிலை தான் நீடித்தது. ஓரே நேரத்தில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வாகன ஓட்டிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நிலை தான் நேற்று முன்தினமும் மாநிலம் முழுவதும் காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் இந்த நிலைமை என்பது மிக அதிகமாக இருந்தது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசலை நிரப்பி சென்றனர். எங்கே இனிமேல் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற பயத்தில் நிறைய பேர் பெரிய தண்ணீர் பாட்டில், கேன், பெரிய பேரல்களில் பெட்ரோல், டீசலை வாங்கி சேமிக்க தொடங்கினர். இதனால் பங்குகளில் வழக்கத்தை விட இரட்டிப்பு விற்பனை நடைபெற்றது.
அதாவது ஒரே நாளில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. இன்னும் 21 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரம் பங்குகளில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் ஒன்றிய அரசின் பெட்ரோலிய துறை சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் மக்களிடம் அச்சம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பங்குகளை நோக்கி வாகன ஓட்டிகள் படையெடுக்கும் நிலை தான் இன்னும் இருந்து வருகிறது. நேற்றும் இதே நிலை தான் நீடித்தது. நேற்றும் இதே போல பெட்ரோல், டீசல் வாங்க வாகன ஓட்டிகள் பங்குகளை அதிக அளவில் நாடினர். வழக்கமாக ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் போடுபவர்கள் எல்லாம் டேங்க் முழுவதையும் நிரப்பிய காட்சியை காண முடிந்தது. இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான பங்குகளில் பெட்ரோல், டீசல் விற்று தீர்ந்த காட்சியை காண முடிந்தது. இதனால், ஏராளமான பங்குகளில்‘நோ ஸ்டாக்’ என்று போர்டு வைக்கப்பட்டது.
பங்க் திறந்த சில மணி நேரத்தில் இந்த நிலை ஏற்பட்டது. திரும்ப பெட்ரோல், டீசல் லோடு வந்த பின்னரே பங்குகள் செயல்பட தொடங்கின. இதனால், வாகன ஓட்டிகள் பங்குகள் இருக்கும் இடத்தை இடத்தை நோக்கி சென்ற காட்சியை காண முடிந்தது. இதே போல தான் தமிழகம் முழுவதும் நிலைமை என்பது இருந்து வருகிறது. போர் முடிந்தால் மட்டுமே மக்களிடம் இருக்கும் அச்சம் போகும் என்ற நிலை தான் ஒவ்வொரு வாகன ஓட்டிகள் மத்தியிலும் நிலவி வருகிறது. எவ்வளவு சொல்லியும் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் வரிசைகட்டி நின்றனர்.
* பிளஸ் 2 தேர்வில் 9 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான இயற்பியல், பொருளியல் தேர்வில் 9 ஆயிரத்து 900 மாணவ மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கியது. 4வது நாளான நேற்று இயற்பியல், பொருளியல், வேலை திறன்களுக்கான பாடங்களில் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 96 ஆயிரத்து 684 மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் 16 ஆயிரத்து 937 பேர் என மொத்தம் 8 லட்சத்து 13 ஆயிரத்து 621 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 7955, தனித் தேர்வர்கள் 1987 பேர் நேற்று நடைபெற்ற இயற்பியல், பொருளியல் தேர்வில் பங்கேற்கவில்லை. இதுதவிர மேற்கண்ட தேர்வுகளில் 16 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டு பறக்கும் படையிடம் சிக்கியுள்ளனர். அவர்களில் கிருஷ்ணகிரி 1, ராணிப்பேட்டை 6, திருப்பத்தூர் 2, திருப்பூர் 5, விருதுநகர் 1, திருவாரூர் 1 என 16 பேர் அடங்குவர்.
