ரயில்முன் பாய்ந்த மே 17 இயக்க நிர்வாகிக்கு ஆறுதல் உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்கத்தை சார்ந்த சிவா திலீபனை சந்தித்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: இந்தி திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சி பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவா திலீபனையும், உடனிருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அப்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், ‘பிள்ளைகளை பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்’ என்று மொழிப்போரின்போது அண்ணா சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும். தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம். தாய்த்தமிழை காக்க எந்த தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே, உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல. எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சிவா திலீபன் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: