திருவான்மியூர் டெப்போவில் இருந்து மாநகர பேருந்தை கடத்திய போதை வாலிபர் கைது


துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் மாமல்லபுரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கான்கிரீட் லாரியின் பின்புறம் மாநகர பேருந்து (தடம் எண்:109) மோதிவிட்டு நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதுபற்றி லாரி ஓட்டுநர், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.அதன்பேரில், கானத்தூர் போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த மாநகர பேருந்தை தேடியபோது, சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் வாலிபர் ஒருவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, பேருந்தை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததும், அவர் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த பேருந்தை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து, திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருவான்மியூர் போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், பேருந்தை அங்கிருந்து எடுத்து சென்றனர்.இதனையடுத்து, மாநகர பேருந்தை கடத்தி வந்த நபரை, திருவான்மியூர் போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பெசன்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம் (33) என்பதும், இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள கார் இன்டீரியர் டெக்கரேஷன் கடையில் வேலை செய்து வருவதாகவும், நேற்று காலை கூடுவாஞ்சேரிக்கு பேருந்தில் சென்றபோது சில்லறை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நடத்துனர் தன்னை ஒருமையில் பேசியதாகவும், பின்னர் இருக்கையில் அமர்ந்தபோது அங்கே உட்கார், இங்கே உட்கார என தொந்தரவு செய்ததாகவும், கூடுவாஞ்சேரி செல்லும் வரை பேருந்து நடத்துனர் தொடர்ந்து திட்டி வந்ததால், தான் மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், விசாரணையில் பயணிகளை அவமதிக்கும் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனருக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். பின்னர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 9 மணிக்கு திருவான்மியூர் பணிமனைக்கு வந்தேன். அங்கு மது வாங்கி அருந்திவிட்டு திருவான்மியூர் பேருந்து நிலைய வாசலில் காத்திருந்தேன். பேருந்து நிலைய காவலாளி கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மாநகர பேருந்தை கடத்தி வந்தேன். வழியில் தூக்கம் வந்ததால், சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டேன், என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கைதான ஆபிரகாமை, நேற்று போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருவான்மியூர் டெப்போவில் இருந்து மாநகர பேருந்தை கடத்திய போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: