ஸ்ரீ பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் பெற போராடிய தொழிலாளர்களை குறிவைத்து நிர்வாகத் தரப்பில் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக, கடந்த மாதம் 31ம் தேதி சாம்சங் நிறுவனத் தலைவரை சந்திக்க முயற்சித்த 3 தொழிலாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக நிர்வாகத் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 பேரை மீண்டும் பணிக்கு சேர்க்க வலியுறுத்தியும், சாம்சங் தொழிலாளர்கள்மீது நிர்வாகம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் இன்று வரை, கடந்த 9 நாட்களாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 58 தொழிற்சாலைகளில் இருக்கும் சிஐடியு தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முதல் சென்னை தேனாம்பேட்டையில் அரசு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
The post சாம்சங் தொழிற்சாலையில் 9வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: தொடரும் முத்தரப்பு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.