டெல்லி தேர்தல் முடிவு எதிரொலி; நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தால் கூட்டணிக்கு அவசியம் என்ன?: சிவசேனா(உத்தவ்) கட்சி கேள்வி

மும்பை: நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தால் இந்தியா கூட்டணிக்கான அவசியம் என்ன? என்று சிவசேனா(உத்தவ் தாக்கரே) கேள்வி கேட்டுள்ளது. டெல்லி சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் 48 இடங்களை வென்ற பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களை பெற்று தோல்வி அடைந்தது. காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

ஆம் ஆத்மியும் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டதால் பாஜ வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவசேனா(உத்தவ் தாக்கரே) கட்சி பத்திரிகையான சாம்னாவில் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தலையங்கம் நேற்று வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இடையேயான ஒற்றுமையின்மை, கருத்து வேறுபாடு ஆகியவை பாஜகவின் வெற்றிக்கு நேரடியாக உதவியது. டெல்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒன்றையொன்று அழிப்பதற்கு போராடின. இதனால் பாஜகவின் வெற்றி எளிதாக அமைந்து விட்டது.

நாம் ஒருவருக்கொருவர் மோதி கொண்டே இருந்தால் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணியின் அவசியம் என்ன? இந்த முடிவுகளிலிருந்தும் யாரும் பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்றால், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தைப் பெற உதவியதற்காக இந்த மக்கள் பெருமைப்பட வேண்டும். இத்தகைய உன்னதமான பணியைச் செய்வதற்கு கங்கை நதியில் குளிக்க வேண்டிய அவசியமில்லை. டெல்லியில் குறைந்தது 14 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் பங்களித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அரியானாவிலும் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரசுக்குள் உள்ள உள் பிரிவுகள் ராகுல் காந்தியின் தலைமையை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனவா. இந்தியா கூட்டணியை நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே காண முடியும் . இந்த கூட்டணியை எல்லா இடங்களிலும், தெருக்களிலும் கூட காண வேண்டிய நேரம் இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டெல்லி தேர்தல் முடிவு எதிரொலி; நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தால் கூட்டணிக்கு அவசியம் என்ன?: சிவசேனா(உத்தவ்) கட்சி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: