மின் தட்டுப்பாட்டை தவிர்க்க கனகவல்லிபுரத்தில் ரூ.3.24 கோடியில் துணை மின் நிலையம்: மின்சார வாரியம் நடவடிக்கை

திருவள்ளூர்: மின் தட்டுப்பாட்டை தவிர்க்க திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரத்தில் ரூ.3.24 கோடியில் 230 கே.வி. துணை மின் நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டதையடுத்து, மின்சார வாரியம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள சென்னை மாவட்டத்தில் இட நெருக்கடி மற்றும் வீட்டுமனை விலை, வாடகை அதிகளவில் இருப்பதால் பெரும்பாலானோர் திருவள்ளூர் மாவட்டத்தில் வீடு கட்டி குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மின் தேவை அதிகளவில் தேவைப்படுகிறது.

திருவள்ளூர் கோட்டத்தில் திருவள்ளூர், காக்களூர், பெரியபாளையம், குஞ்சலம், பாப்பரம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் 110 கே.வி. மின் தடங்கள் உள்ளன. இங்கு குடியிருப்பு அதிகளவில் இருப்பதாலும், புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஏதுவாக போதிய மின்சாரம் கிடைக்காமல் குறைந்த மின்னழுத்தம் ஏற்படும் என்பதாலும் தொழிற்சாலைகள் தொடங்க காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது அரக்கோணம் அடுத்த மோசூர் பகுதியில் 230 கே.வி. துணை மின் நிலையம் உள்ள நிலையில் அங்கிருந்து பெறப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லை.

கோடை காலத்தில் அடிக்கடி ஓவர்லோடு காரணமாக மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே மின்னழுத்த குறைபாடுகளை தவிர்க்க கனகவல்லிபுரத்தில் 230 கே.வி. துணை மின்நிலையத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்பதூர் அருகே உள்ள கனகவல்லிபுரம் பகுதியில் 230 கே.வி. துணை மின்நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு 2023ல் அதற்கான நிலத்தையும் அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

இருப்பினும் மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான தொகையை ஒதுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 230 கே.வி. துணை மின் நிலையம் அமைப்பது தாமதமாகி வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் கோட்டத்தில் வெயில் காலத்தில் ஏற்படும் குறைந்த மின் அழுத்தத்தையும், மின் தட்டுப்பாட்டையும் போக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.

இதனையடுத்து கனகவல்லிபுரத்தில் நிலத்தை கையகப்படுத்த ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் துணை மின் நிலையம் தடவாளங்களை உடனடியாக அமைத்து 230 கே.வி. துணை மின் நிலையத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post மின் தட்டுப்பாட்டை தவிர்க்க கனகவல்லிபுரத்தில் ரூ.3.24 கோடியில் துணை மின் நிலையம்: மின்சார வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: