திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி: அவதூறு பரப்ப வேண்டாம் என அண்ணாமலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை

சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னப்படி அனைத்தையும் செய்துள்ளது. விவசாய அரசியல் வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தல் அறிக்கையில் திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அண்ணாமலைக்கு நினைவூட்டி எண்.33வது வாக்குறுதி என்று குறிப்பிட்டு அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை, விவசாயிகளை ஏமாற்றுகின்ற ஒரு அரசாக முதல்வர் இருக்கின்றார் என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

துறை அமைச்சர் என்ற முறையில் நானும் அதற்கு உரிய விளக்கத்தை முறையாக அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தேன். அறிக்கையை படித்த பிறகு அவருக்கு நான் புரிந்திருக்கும் என்று தான் நான் நம்பினேன். ஆனால், அதை இன்னும் புரியாததை போல் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யமால் ஏமாற்றி விட்டார் என்று விவசாயிகள் மீது இரக்கம் காட்டுகின்ற வகையில் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

பயிர்கடன் ரூ.12,110 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, 5 பவுன் அளவிற்கும் கீழ் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தவர்களுக்கு ரூ.5013 கோடி நகை கடன் தள்ளுபடி செய்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுகளை சார்ந்த சகோதரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2755 கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டது. இவை அனைத்தும் மொத்தமாக ரூ.19,878 கோடி அளவிலான கடன்கள் 45,09,640 எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

4 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன்களை இல்லை என்று இப்பொழுது மறுப்பது எந்த வகையில் நியாயம். பொது வாழ்கையில் இருக்க கூடிய எல்லோருக்கும் இரவு, பகல் ஒன்றுதான். அது முறையாக என்னுடைய கவனத்திற்கு வரும், வந்த பிறகு அது சம்மதமாக நான் ஆய்வுகளை செய்துதான் அறிக்கை வெளியிட முடியுமே தவிர அவர் எப்பொழுது அறிக்கை கொடுப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டு அடுத்த நிமிடமே நானும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்பது ஏற்புடையதல்ல.

ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர் மேலாண்மைக்காக ரூ.36,000 கோடி கோரப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து பெற்றத் தொகை ரூ.260 கோடி மட்டுமே ஆகும். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிற்கு நினைவூட்டி, கடிதம் அனுப்பியும் எந்திவித நடவடிக்கைகளையும் தமிழக மக்களுக்கு மேற்கொள்வில்லை.

இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறை அண்ணாமலைக்கு இருக்குமேயானால் இவருடைய செல்வாக்கு அங்கே ஒன்றிய அரசிடமும், பிரதமர் இடத்திலும் அந்த உதவிகளையெல்லாம் கேட்டு பெற்றுத்தந்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்கின்ற நல்ல காரியமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றாமல் விட்டுவிட்டு கொடுக்க வேண்டிய நிதிகளையும் கொடுக்க மறுத்துக் கொண்டிருக்கின்ற கட்சியை சார்ந்தவர் இந்த கேள்வியை எழுப்புவது எந்த வகையில் நியாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி: அவதூறு பரப்ப வேண்டாம் என அண்ணாமலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: