முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை

 

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரன்யம் பகுதிகளில் உள்ள வளர்ப்பு யானை முகாம்களில் வயதான ஓய்வுபெற்ற யானைகள், கும்கி யானைகள் மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்ட 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளின் வயது, உயரம் இவற்றிற்கு ஏற்ப அவற்றின் உடல் எடை பராமரிக்கப்படுகிறது. உடல் எடை உரிய அளவிற்கு மேல் அதிகரிக்கும் யானைகளுக்கு உணவு கட்டுப்பாடு மற்றும் நடைபயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி நேற்று தொரப்பள்ளி வனத்துறை சோதனை சாவடியில் உள்ள எடை மேடையில் மிக வயதான யானைகள், மஸ்து ஏற்பட்ட யானைகள் மற்றும் சிறிய குட்டிகள் தவிர்த்து அனைத்து யானைகளுக்கும் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யானைகளுக்கு குறைந்தபட்சமாக 100 முதல் 200 கிலோ வரை எடை அதிகரித்து உள்ளதாகவும், எடை அதிகரிப்புக்கு ஏற்ப அவற்றிகான உணவு மற்றும் பராமரிப்பு முறைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: