ஊத்தங்கரை, ஜன.28: ஊத்தங்கரையில் இருந்து வெங்கடத்தாம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் பெஞ்சல் புயல் மழையின்போது நீர்வரத்து அதிகரித்ததால், ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. ஊத்தங்கரையில் இருந்து வெங்கடத்தாம்பட்டி, புதூர், சோளக்கப்பட்டி, படப்பள்ளி, பெருமாள் குப்பம், புதுக்காடு, வீராட்சிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள், அவர்கள் விவசாய நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை இந்த வழியாக ஊத்தங்கரை காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், பள்ளி -கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள் என நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அடித்துச் செல்லப்பட்டு பல நாட்களாகியும் பாலத்தை அப்படியே விட்டு விட்டதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடைந்த பாலத்தை சீர்செய்து, சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post உடைந்த தரைப்பாலத்தை கண்டுகொள்ளாத அதிகாரிகள் appeared first on Dinakaran.
