அரசியலமைப்பு சபையில் அம்பேத்கர் விவகாரம்; நேரு குறித்து அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

திப்ருகர்: அரசியலமைப்பு சபையில் அம்பேத்கர் சேர்க்கப்பட்ட விசயம் குறித்தும், நேரு குறித்தும் அசாம் முதல்வர் கூறிய சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அசாம் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, நேற்று திப்ருகரில் நடந்த குடியரசு தின உரையில், ‘நமது அரசியலமைப்பின் நிறுவனரான சட்டமேதை அம்பேத்கர், அரசியலமைப்பு சபையில் சேர்ந்து பணியாற்றுவதற்காக பல சவால்களை எதிர்கொண்டார். அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களின் முதல் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் தலைவரான ஜோகெந்திரநாத் மொண்டல், அம்பேத்கரின் பெயரை தனது பெயருக்கு பதிலாக முன்மொழிந்தார். அப்போதுதான் அம்பேத்கருக்கு அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களில் ஒருவரானார். அம்பேத்கரை அரசியலமைப்பு குழுவில் சேர்ப்பது நேருவுக்கு பிடிக்கவில்லை. அம்பேத்கர் முரண்பட்ட மனிதர் என்றும், அதனால்தான் அவரை அரசியலமைப்பு சபையிலிருந்து விலக்கி வைக்க நேரு விரும்பினார்.

மகாத்மா காந்தி அவர்கள் அம்பேத்கரின் திறமையை அங்கீகரித்து, நேரு எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக நின்றதால் அம்பேத்கரை அரசியலமைப்பு சபையில் சேர்க்க வலியுறுத்தினார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பை நமக்கெல்லாம் வழங்கிய அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு சபையை உருவாக்கிய பங்கு காந்திக்கு உண்டு. காந்தியின் முயற்சி பலனளித்தது’ என்று அவர் கூறினார்.

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அசாம் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலவருமான தேபப்ரதா சைக்கியா கூறுகையில், ‘அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்தும் வகையிலும், உண்மையை சிதைக்கும் முயற்சியில் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஈடுபட்டுள்ளார். அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்ட காலத்தில், அம்பேத்கர் கிழக்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இந்தியா – பாகிஸ்தான பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு வங்கத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பகுதியானது பாகிஸ்தானுக்குச் சென்றது. அதனால் தனது ஒதுக்கீடு தொகுதியை அம்பேத்கர் காலி செய்ய வேண்டியிருந்தது. இதைப் பற்றி விவாதிக்க நேருவும் சர்தார் படேலும் காந்திஜியிடம் சென்றனர். அதன்பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து ஒரு இடத்தை காலி செய்து, அந்த இடத்தின் மூலம் அரசியலமைப்பு சபையில் அம்பேத்கருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது’ என்று கூறினார்.

The post அரசியலமைப்பு சபையில் அம்பேத்கர் விவகாரம்; நேரு குறித்து அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: