டெல்லியில் 3 இடங்களில் கண்காட்சி ஆட்டோமொபைல் துறையில் 1.50லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய வாகன கண்காட்சியான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ஐ பிரதமர் மோடி நேற்று டெல்லி பாரத் மண்டபம், யஷோ பூதி, கிரேட்டர் நொய்டா ஆகிய 3 இடங்களில் தொடங்கி வைத்தார். இந்த எக்ஸ்போ 22ம் தேதி வரை நடை பெற உள்ளது. இதில் 5,100 சர்வதேச பங்கேற்பாளர்கள், உலகம் முழுவதிலுமிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி, ஹூண்டாய், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களில் இ வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் 40 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யஷோபூமியில் இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்,’ வாகனத்துறையில் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா ஒரு சிறந்த இடமாக உள்ளது.

பசுமை தொழில்நுட்பம், மின் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இவி கார் விற்பனை எட்டு மடங்கு அதிகரிக்கும். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சி பெரும் பங்காற்றியுள்ளது. இத்துறையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த ஆண்டு 12 சதவீத வருடாந்திர வளர்ச்சியைக் கண்டது. ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பேட்டரி சேமிப்பு அமைப்பில் முதலீடு செய்ய இது சரியான நேரம்’ என்றார்.

* 65 லட்சம் சொத்து அட்டைகள் இன்று விநியோகம்
பிரதமர் மோடி இன்று 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். சட்டீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர், லடாக் பகுதியில் உள்ள 50 ஆயிரம் கிராமங்களைச்சேர்ந்த பயனாளிக்கு இந்த சொத்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

The post டெல்லியில் 3 இடங்களில் கண்காட்சி ஆட்டோமொபைல் துறையில் 1.50லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: