நக்சலைட்டு விக்ரம் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் போலீசாரின் தீவிர முயற்சியால் 6 பேர் சரண் அடைந்துள்ளனர். இன்னும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. நக்சலைட்டுகள், தேசிய நீரோட்டதிற்கு திரும்ப வேண்டும் என விடுத்த அழைப்பை ஏற்று 6 பேரின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் விக்ரம் விவகாரத்திற்கும் நக்சலைட்டுகள் சரண் அடைந்த பிறகு அவர்களின் நல்வாழ்விற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையும் வெவ்வேறானது.
எனவே, இரண்டு சம்பவமும் ஒன்று கிடையாது. முதல்வர் சித்தராமையா முன்னிலையில் நக்சலைட்டுகள் சரண் அடைந்தபோது ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. அத்துடன் நக்சலைட்டுகள் சரண் அடையும் விஷயத்தில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும். எனவே, போலீசார் அதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நக்சலைட்டுகள் அவர்களின் ஆயுதங்களை எந்தெந்த இடங்களில் மறைத்து வைத்துள்ளனர் என்பதை தெரிந்து அதை கைப்பற்றும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நக்சலைட்டுகள் சரண் அடைந்த நிலையில் கர்நாடகா நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வருகிற நபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கர்நாடக மாநில அரசின் சார்பில் சரண் அடையும் நக்சலைட்டுகளின் மறு வாழ்விற்காக நக்சல் கொள்கை 2024ன் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏ, பி, விதிகளின்படி சரண் அடைந்துள்ள நக்சலைட்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
6 பேர் சரண் அடைந்த நிலையில் ஒருவர் எதற்காக மனம் மாறினார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவரை சரண் அடைய செய்யும் வகையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தில் நக்சலைட்டுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். மாநிலத்தில் இதற்கு முன்பு பாஜ ஆட்சி நடந்தது. பாஜ ஆட்சியில் பணியாற்றிய அதே போலீஸ் அதிகாரிகள் இப்போதும் பணியில் உள்ளனர். எனவே, நக்சலைட்டுகள் சரண் அடைந்தால், அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்தும் சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* 6 பேரில் ஒருவர் தமிழ்நாடு மற்றொருவர் கேரளா
பரமேஸ்வர் கூறுகையில், ‘முதல்வர் சித்தராமையா முன்னிலையில் கடந்த புதன் கிழமை சரண் அடைந்த நக்சலைட்டுகள் சிருங்கேரியை சேர்ந்த முன்டகாரு லதா, கலசா வனசாக்ஷி பெலகோலே, தென்கனரா சுந்தரி கட்லூரு மற்றும் ரெய்ச்சூர் மாரேப்பா ஆரோலி ஆகிய நால்வர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். கே.வசந்தா, தமிழக மாநிலம் வேலூரையும், என்.ஜீஷா, கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு நபர் கடைசி நேரத்தில் சரண் அடையவில்லை. அவரின் மனமாற்றத்திற்கு காரணம் தெரியவில்லை. அதே நேரம் அவரையும் சரண் அடைய செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்கிறோம்’ என்றார்.
The post சரண் அடைந்த நக்சலைட்டுகளின் ஆயுதங்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம்: உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் தகவல் appeared first on Dinakaran.
