பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு தேவையான அலங்காரக்கயிறு, திருகாணி, சலங்கை விற்பனை மும்முரம்


சத்தியமங்கலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான அலங்கார கயிறுகள் விற்பனை நடைபெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும் ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்து அவற்றின் கழுத்தில் புதிய அலங்கார கயிறுகள் மற்றும் மணிகள் கட்டுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடை அலங்கார கயிறுகள் கடைகள் அதிகளவில் போடப்பட்டது. நேற்று வாரச்சந்தையில் அதிகளவில் அலங்கார கயிறுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டூர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் தயார் செய்யப்பட்ட அலங்கார கயிறுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அலங்கார கயிறு விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கால்நடைகளுக்கு புதிய கயிறுகள் வாங்க விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக அலங்கார கயிறுகள் விற்பனை களை கட்டியது. தலைக்கயிறு ஒரு ஜோடி ரூ.100, கழுத்துக்கயிறு ரூ.30, மூக்கணாங்கயிறு ரூ.10 முதல் ரூ.30, தாம்புக்கயிறு ரூ.20, கொம்புகயிறு ரூ.20 சங்கு கயிறு ரூ.40க்கும் விற்கப்பட்டது. இதுதவிர ஆடு, மாடுகளுக்கு பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட திருகாணி, ஆட்டு மணி, வளையல் மற்றும் சலங்கை என கால்நடைகளுக்கு தேவையான அனைத்தும் விற்கப்பட்டன.

அலங்கார கயிறுகள் விலை உயராமல் கடந்த ஆண்டின் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் அதிக அளவில் அலங்கார கயிறுகளை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து கயிறு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையில், மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு பழைய கயிறுகளை மாற்றி புதிய கயிறுகளை கட்டுவது வழக்கம். இதனால், கயிறு, திருகாணி, சலங்கை விற்பனை நடக்கிறது. மழை நன்கு பெய்து விவசாயம் செழித்துள்ளதால் மாட்டுப் பொங்கலை கொண்டாட விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்தாண்டு கயிறு வகைகளின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. அதனால் புதிய கயிறுகளை வாங்க விவசாயிகள் அதிகளவில் வந்தனர், இதனால் வியாபாரம் நன்றாக இருந்தது’’ என தெரிவித்தனர்.

மாடுகளுக்கு கொம்பு சீவும் பணி
பொங்கல் பண்டிகையில் விவசாயிகள் வளர்க்கும் கறவை, காளை மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவர். பின்னர் மாடுகளின் கழுத்தில் மணி, அலங்கார கயிறு கட்டி, மாலை அணிவித்து அலங்காரத்துடன் பொங்கல் படையலிடுவது வழக்கம். அதற்காக மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்ட ஏதுவாக விவசாயிகள் தங்களது மாடுகளை புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு கொண்டு வந்து கொம்பு சீவும் தொழிலாளர்களின் மூலம் மாடுகளின் கொம்புகளை சீவி அழகுபடுத்தி செல்கின்றனர். சிறிய கொம்புகள் உள்ள மாடுகளுக்கு ரூ.100, பெரிய கொம்புகள் உள்ள மாடுகளுக்கு ரூ.250 கொம்பு சீவுவதற்கு கூலி கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு தேவையான அலங்காரக்கயிறு, திருகாணி, சலங்கை விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: