போலி ஆவணம் தயாரித்து ரூ.1.50 கோடி நில மோசடி : சாட்சி கையெழுத்திட்டவர் கைது

சென்னை: போலி ஆவணம் தயாரித்து ரூ.1.50 கோடி நில மோசடியில் தலைமறைவாக இருந்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா வல்லத் (72) என்பவர் நிலமோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரட்டூர் கிராமம், டிவிஎஸ் நகரில் 2,112 சதுரடி இடத்தை எனது கணவர் முரளி 1990ம் ஆண்டு கிரையம் பெற்றார்.

என் கணவர் 2018ம் ஆண்டு இறந்த பிறகு மேற்படி சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளது. இந்நிலையில், மேற்கூறிய நிலத்தில் மின் இணைப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. விசாரித்தபோது, கீர்த்திகா என்பவர் சதீஷ் என்பவரிடமிருந்து கடந்த 2023ம் வருடம் கிரையம் பெற்றுள்ளதாக தெரிய வந்தது. சதீஷ் என்பவரை விசாரித்தபோது, தான் முரளி என்பவரிடம் இருந்து கிரையம் பெற்றதாக தெரிவித்தார்.

என் கணவர் 2018ல் இறந்துவிட்ட நிலையில், 2023ல் சதீஷ் என்பவருக்கு எப்படி கிரையம் செய்திருக்க முடியும்? ஆகவே போலி ஆவணங்கள் தயார் செய்து எனது கணவர் முரளி பெயரில் ஆள்மாறாட்டம் செய்து எனது சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் ஆள்மாறாட்ட முரளி என்பவர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து, உண்மையான முரளி போன்று ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்குச் சொந்தமில்லாத சொத்தை வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும். இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் பெருமாள் தலைமையில் ராதிகா மற்றும் கணபதி ஆகிய இருவரையும் ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் வள்ளி மேற்பார்வையில் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முரளி என்பவருக்கு உடந்தையாகவும், போலி கிரைய பத்திரத்தில் போலி சாட்சி கையெழுத்தும் போட்ட மாதவரம் சாமி நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (எ) முகமது ரபிக் (52) என்பவரை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணம் தயாரித்து ரூ.1.50 கோடி நில மோசடி : சாட்சி கையெழுத்திட்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: