உரிமம் காலாவதியாகிவிட்டதாக கூறி இறைச்சி கடையில் ரூ.13,000 அபேஸ்: உரிமம் ஆய்வாளர் மீது புகார்

திருவொற்றியூர்: எர்ணாவூரில் கோழி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் சரத்ராஜன். இவர், நேற்று மாலை, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எர்ணாவூரில் 5 ஆண்டாக இறைச்சி வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த மாதம் 21ம் தேதி, சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் வருவாய் பிரிவு, உரிமம் ஆய்வாளர் வீரமுனிநாதன் என்பவர், எனது கடைக்கு வந்து, இறைச்சி கடைக்கான உரிமம் காலாவதியாகி விட்டதாக கூறினார். மேலும், உரிமம் இன்றி இறைச்சி விற்பனை செய்ததற்காக, ரூ.13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, ஜி-பே மூலம், அந்த பணத்தை அவருக்கு அனுப்பினேன். அதன் பின்னர், எனது கடையின் உரிமம் குறித்து நான் ஆய்வு செய்தபோது, மார்ச் 31ம் தேதி வரை உரிமம் இருப்பது தெரிந்தது. இதுபற்றி வருவாய் பிரிவு அலுவலர்களிடம் கேட்ட போது, எனக்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதுபற்றி உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட உதவி வருவாய் அலுவலர் அர்ஜூனன், சம்பந்தப்பட்டவர் தற்போது விடுப்பில் இருப்பதாகவும் அவர் வந்தவுடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட உரிமம் ஆய்வாளர் தான் பெற்ற ரூ.13 ஆயிரத்தில், ரூ.12 ஆயிரத்தை ஜி-பே மூலம் திருப்பி அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

The post உரிமம் காலாவதியாகிவிட்டதாக கூறி இறைச்சி கடையில் ரூ.13,000 அபேஸ்: உரிமம் ஆய்வாளர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: