தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு: 5 இளைஞர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (50). இவர், வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கூட்ஸ் ஷெட் பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த 4 பேர், ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த செல்போனைப் பறித்து சென்றனர். முகத்தில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வியாசர்பாடி தாமோதர் நகர் 2வது தெருவை சேர்ந்த மோகனகிருஷ்ணன் (21), அதே பகுதியைச் சேர்ந்த மதன் (23), நவீன் (21), ஆறுமுகம் (21), ஜெகன் (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மது போதையில் கூலி தொழிலாளியை அடித்து செல்போன் பறித்ததும், ராஜ்குமாருக்கும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு: 5 இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: