வெலிங்டன் ராணுவ பகுதியில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

குன்னூர், ஜன.4: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெலிங்டன் கண்டோன்மெண்ட் ராணுவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், கண்டோன்மெண்ட் முன்னாள் துணை தலைவர் வினோத்குமார், குன்னூர் நகர காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை போற்றும் வகையில் பள்ளி குழந்தைகள் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து சிலம்பாட்டம் கலையில் அசத்தினர். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் பழவகைகளை சேர்ந்த பல்வேறு வகை பழ மரக்கன்றுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

மீதமுள்ள மரக்கன்றுகளை குன்னூர் சர்குரு பள்ளியை சுற்றி நடவு செய்யப்பட்டது. பின்னர், பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும், தங்களது திறமைகளை வெளிகாட்டிய மாற்று திறனாளிகளுக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும் கர்னல் பிரதீப்குமார், மேஜர் முத்துக்குமார், டிஎஸ்பி முத்தரசன் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.

கண்டோன்மெண்ட் முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி தன்னார்வலர்கள் கூட்டமைப்பு என்ஜிஓ குழுவினர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீஸ், நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் துணைத்தலைவர் சுரேஸ் மூர்த்தி, பிரசாந்த், விஜயகாந்த் முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோவர்த்தணன் ராமசாமி நன்றி தெரிவித்தார்.

The post வெலிங்டன் ராணுவ பகுதியில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: