சமத்துவத்தை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன..? பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும், குறிப்பாக எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு கடுமையான சூழல் இருந்து வரும் நிலையில் சுமுகமான ஒரு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்,‘‘கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிமுறைகளின்கீழ் ஜாதி ரீதியிலான பாகுபாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சொல்கின்றது. ஆனால் இருக்கக்கூடிய 820 பல்கலைக்கழகங்களில் இதை செயல்படுத்துவதற்கான எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது?

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐஐடிக்களில் மட்டும் 115 தற்கொலைகள் நடந்துள்ளன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை தேவையாகும்” என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ பல்கலைக்கழகங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது? பதிவு செய்யப்பட்ட புகார்கள் என்ன? எத்தனை புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? போன்ற அனைத்து விவரங்களையும் கொண்ட அறிக்கையை ஒன்றிய பல்கலைக்கழக மானிய குழு சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

The post சமத்துவத்தை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன..? பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: