உபி முதல்வருக்கு ஜமாத் தலைவர் கடிதம் மகா கும்பமேளாவில் பெரிய அளவில் மதமாற்றம் நடக்கும்

லக்னோ: மகா கும்பமேளாவில் பெரிய அளவில் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக அச்சம் தெரிவித்து ஜமாத் தலைவர் உத்தரப்பிரதே முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா வரும் 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழா ஏற்பாட்டில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா சஹபுதீன் ரஸ்வீ பரேல்வி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பரபரப்பான கடிதத்தை எழுதி உள்ளார். இது குறித்து பரேல்வி நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் பெரிய அளவில் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வந்துள்ளன. அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையில் எனது அச்சம் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இனி அரசு தான் முடிவெடுக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பரில் அகாரா பரிஷத் மற்றும் நாகா துறவிகள் கூட்டம் நடந்தது. அதில் கும்பமேளாவில் முஸ்லிம்கள் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என பேசி உள்ளனர். அதனால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க முஸ்லிம்கள் கும்பமேளாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறேன்’’ என்றார்.

இதற்கு மற்ற முஸ்லிம் மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜமியத் உலமா இ ஹிந்த்தின் உபி மாநில சட்ட ஆலோசகர் மவுலானா காப் ரஷிதி கூறுகையில், ‘‘உலகம் முழுவதும் இந்தியா மதச்சார்பற்ற நாடாக அறியப்படும் நிலையில், இதுபோன்ற கோரிக்கைகள் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறும் செயலாகும். மகா கும்பமேளாவில் முஸ்லிம்களை தடை செய்வது பற்றி பேசுவது அரசியல் சாசனத்தின் ஆன்மாவை நசுக்குவது போன்றது’’ என்றார். உபி ஹஜ் கமிட்டி தலைவரும், சிறுபான்மை நலத்துறையின் முன்னாள் அமைச்சருமான மொசின் ராசா கூறுகையில், ‘‘முதல்வருக்கு கடிதம் எழுதியவர்கள் சட்டவிரோத மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அப்படி மதம்மாறியவர்கள் கும்பமேளாவில் மீண்டும் தாய் மதத்திற்கு மாறிவிடுவார்களோ என அஞ்சுகிறார்கள். இது தனிநபர் தன்னை காப்பாற்றிக் கொள்ள செய்யும் சூழ்ச்சி’’ என கூறி உள்ளார்.

 

The post உபி முதல்வருக்கு ஜமாத் தலைவர் கடிதம் மகா கும்பமேளாவில் பெரிய அளவில் மதமாற்றம் நடக்கும் appeared first on Dinakaran.

Related Stories: