தனியார்மயத்தால் தரமான கல்வியை தர முடியாது: சென்னை ஐஐடி மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது கல்வி முறையில் மாற்றங்கள் செய்வது குறித்து பல விஷயங்கள் பேசினார். அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில்,‘‘ மக்களுக்கு தரமான கல்வி அளிப்பது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். தனியார்மயமாக்கல் மற்றும் நிதியுதவிகளின் மூலம் இந்த நிலையை அடைய முடியாது.நான் ஏற்கனவே இதைச் சொல்லி உள்ளேன். நம் நாட்டில் பல சிறந்த கல்வி நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக தான் உள்ளன. அவற்றில் சென்னை ஐஐடியும் ஒன்று. அரசாங்கங்கள் கல்விக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் பேசி என்ன ஆக விரும்புகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.

அப்போது பலர் தாங்கள் வக்கீல், மருத்துவர், பொறியாளர் அல்லது ராணுவ வீரராக ஆக விரும்புவதாகச் கூறினர். இந்த நாட்டில் ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளன என்று இருக்க முடியாது. ஆனால் நம்முடைய கல்வி அமைப்பு அதைத்தான் செய்ய துாண்டுகிறது. நாட்டின் கல்வி முறை ஒருவர் பொறியாளராகவோ அல்லது மருத்துவராகவோ இருந்தால் மட்டுமே வெற்றியை அளவிடுகிறது.சிலர் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் பணிகளில் சேருகிறார்கள்.இது மக்கள்தொகையில் ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம்தான். மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் இதை ஒருபோதும் செய்யப்போவதில்லை. மாணவர்களை அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்க வேண்டும். நமது கல்வி முறை பல விஷயங்களை புறக்கணிக்கிறது.அது பல தொழில்களை குறைத்து மதிப்பிடுகிறது. நான்கைந்து தொழில்களை மிகைப்படுத்துகிறது’’ என்றார்.

The post தனியார்மயத்தால் தரமான கல்வியை தர முடியாது: சென்னை ஐஐடி மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: