கடந்த 10 ஆண்டுகளில் செய்த கடின உழைப்பின் பலனை நாடு இப்போது அறுவடை செய்து வருகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான நுகர்வு இடைவெளி குறைந்துள்ளது. நகர்ப்புற மக்கள்தான் கிராமங்களில் உள்ளவர்களை விட அதிகமாக செலவழிக்க முடியும் என்று முன்பு நம்பப்பட்டது. தொடர்ச்சியான முயற்சிகள் இந்த ஏற்றத்தாழ்வைக் குறைத்துள்ளது. 2011 உடன் ஒப்பிடும்போது, கிராமப்புற இந்தியாவில் நுகர்வு கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. சுதந்திரம் அடைந்த பின்னர் பல ஆண்டாக லட்சக்கணக்கான கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் இருந்தன.
கிராமங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களை கடந்த அரசுகள் புறக்கணித்துள்ளன. இதுவே, கிராமங்களிலிருந்து இடம்பெயர்வதற்கும், வறுமை அதிகரிப்பதற்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது. 2012ல் 26 சதவீதமாக இருந்த கிராமப்புற வறுமை 2024ல் 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாடு தற்போது உண்மையில் வறுமையை குறைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரசின் ராகுல் காந்தி, சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையல் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* ஏஐயில் முன்னிலை
தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுான விஷால் சிக்கா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதன் தேவைகள் குறித்து சிக்கா, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த சந்திப்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘புதுமை மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா முன்னிலை வகிக்க உறுதிபூண்டுள்ளது’’ என கூறி உள்ளார்.
The post சாதியின் பெயரால் சமூகத்தில் விஷத்தை பரப்ப சிலர் முயற்சி: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.