புதுடெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிமூட்டம் காரணமாக, நேற்று 100 விமானங்கள் தாமதமானது. மேலும், 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். டெல்லியில் நேற்றும் தொடர்ந்து 3வது நாளாக கடும் பனிப்பொழிவால் , சாலை போக்குவரத்து, விமான மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய 100 விமானங்கள் தாமதமாகின. டெல்லி விமான நிலைய அதிகாரி கூறுகையில், ‘விமான நிலையத்தில் பார்வை தூரம் குறைந்ததால் நள்ளிரவில் 19 விமானங்கள், வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
வந்து சேர வேண்டிய பல விமானங்கள் தாமதமாகின. மேலும், 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான நிர்வாகம், டெல்லிக்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது,’ என்றார். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டத்தினால் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
The post கடும் பனிமூட்டத்தால் டெல்லி ஏர்போர்ட்டில் 100 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.