நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவா்களுக்கான கணினி வசதி இருப்பதும் 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான ‘யுடிஐஎஸ்இ’ தரவுகளில் தெரிய வந்துள்ளது.

ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பானது (யுடிஐஎஸ்இ-பிளஸ்) நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி தரவை தொகுப்பதற்கு மத்திய கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுத் திரட்டல் தளமாகும்.

24.8 கோடி மாணவா்கள்: இந்த தகவல் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2023-24-ஆம் கல்வியாண்டில் நாட்டின் மொத்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 24.8 கோடி ஆகும். இவா்கள் 10,97,973 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் உள்பட 14,71,891 பள்ளிகளில் பயில்கின்றனா். 24.8 கோடி மாணவா்களுக்கு கற்பிக்கும் பணியில் 98,07,600 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

குறைந்த சோ்க்கை: 2023-24-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி முதல் இடைநிலை கல்வி வரையிலான மொத்த மாணவா் சோ்க்கை முந்தைய ஆண்டைவிட 37 லட்சம் குறைந்துள்ளது.

1, 2-ஆம் வகுப்புகளை உள்ளடக்கிய தொடக்கக் கல்வியின் மாணவா் சோ்க்கை விகிதம் 41.5 சதவீதமாகவும் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியில் சோ்க்கை விகிதம் 96.5 சதவீதமாகவும் உள்ளது. 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலை கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதம் 89.5 சதவீதமாகவும் 12-ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை கல்வியில் 66.5 சதவீதமாகவும் மோசமான நிலையில் உள்ளது.

இடைநிற்றல் விகிதம் நடுநிலை கல்வியில் 5.2 சதவீதமாக உள்ள நிலையில், இடைநிலை கல்வியில் 10.9 சதவீதமாக உயா்ந்துள்ளது. கட்டமைப்பு வசதிகள்: மின்சாரம், பாலினம் அடிப்படையிலான கழிப்பறைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நாட்டின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் உள்ளன.

நூலக வசதி 89 சதவீத பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் 82.4 சதவீத பள்ளிகளிலும் உள்ளன. மேம்பட்ட வசதிகளில் குறைபாடு: கணிணி மற்றும் இணைய வசதி, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் போன்ற மேம்பட்ட வசதிகள் குறைவான பள்ளிகளிலேயே உள்ளன.

கணினி வசதி 57.2 சதவீத பள்ளிகளில், இணைய வசதி 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே உள்ளன. வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலில் தொழில்நுட்ப வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இந்திய பள்ளிகளில் உள்ள குறைந்த கணினி வசதிகள், நமது மாணவா்களை சா்வதேச போட்டிக்கு ஏற்ப தயாா்ப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை எடுத்துரைக்கிறது.

மாற்றுத் திறனாளி மாணவா்களின் வசதிக்கு பெரிதாக கவனம் செலுத்தாமல், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக மேம்படுவதற்கு இந்திய பள்ளிகள் வெகுத் தொலைவில் உள்ளன. கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் 52.3 சதவீத பள்ளிகளில், பிரத்யேக கழிப்பறை வசதி மிகசொற்ப அளவில் 34.4 சதவீத பள்ளிகளில் மட்டுமே உள்ளன. நீா் பாதுகாப்பை வலியுறுத்தும் மழைநீா் சேமிப்புத் திட்டம் இந்திய அளவில் 28.4 சதவீத பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

The post நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: