ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் மாநில அரசுகளின் ஒப்புதலை சிபிஐ பெறத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் சிபிஐ ஒப்புதல் பெறத்தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆந்திரா கேடர் ஒன்றிய அரசு ஊழியர்கள் 2 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து அந்த 2 ஊழியர்களும் ஆந்திரா உயர் நீதிமன்றத்தை நாடினர். அதில்,’ ஆந்திரா கேடர் அதிகாரிகள் மீது சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்ய ஆந்திரா அரசின் அனுமதி பெற வேண்டும். எனவே எங்கள் மீதான சிபிஐ தொடர்ந்த எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இதை ஏற்ற ஆந்திரா உயர் நீதிமன்றம் ஊழல் தொடர்பாக ஒன்றிய அரசு ஊழியர்கள் இருவர் மீதான சிபிஐ விசாரணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிடி ரவிக்குமார், ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜனவரி 2ம் தேதி 32 பக்க தீர்ப்பை வழங்கினார்கள். அதில்,’ குற்றங்கள் ஒன்றிய அரசின் சட்டத்தின் கீழ் இருந்தால், ஒன்றிய அரசு ஊழியர்களை உள்ளடக்கியதாக இருந்தால், மாநில அரசுகளிடம் அத்தகைய ஒப்புதல் தேவையில்லை. எனவே ஒன்றிய அரசு ஊழியர்கள் மீதான குற்றங்கள் தொடர்பான சிபிஐ விசாரணைகளுக்கும், அதன் தொடர்ச்சியின் கீழ் தொடரப்பட்ட நடவடிக்கைகளையும் ரத்து செய்த உத்தரவு சரியானது அல்ல என்று நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம். எனவே சிபிஐ விசாரிக்க அனுமதி அளிக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

The post ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் மாநில அரசுகளின் ஒப்புதலை சிபிஐ பெறத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: