பொங்கலன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

அவனியாபுரம்: மதுரை மாவட்டத்தில் தமிழர் திருநாளை வரவேற்கும் வகையில், அவனியாபுரத்தில் தைப்பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதன்படி வரும் ஜன.14ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையேற்றார். கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார், எம்எல்ஏ புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகூர்த்த கால் நடும் விழாவை தொடர்ந்து, மாநகராட்சி சார்பாக ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளுக்கு டெண்டர் எடுத்தவர்கள், காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் வாடிவாசல் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தொடங்கினர். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளரிடம் கூறுகையில், அலங்காநல்லூர் அருகே கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் தனியார் ஏற்பாடு செய்யும் ஜல்லிக்கட்டு அல்லது கிரிக்கெட் போன்றவற்றை நடத்தலாம். தற்போது மாமதுரை அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு வழக்கம்போலவே வீரர்களும், காளை உரிமையாளர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவாகும் எண்ணிக்கை அடிப்படையில், காளைகள் அவிழ்க்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை கலெக்டர் விரைவில் வெளியிடுவார் என்றார்.

The post பொங்கலன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: