கடந்த பிப்ரவரி மாதம் 2024-2025ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசு நிதிநிலை அறிக்கை ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பொதுப்பணித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
ரூ.102 கோடியில் 5,000 இருக்கைகளுடன் மாநாட்டுக் கூடம், ரூ.172 கோடியில் 10,000 பேர் அமரும் அரங்கம் அமைகிறது. கூட்ட அரங்குகள், அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ரூ.108 கோடியில் அமைக்கப்பட உள்ளது. வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவை ரூ.105 கோடியில் அமைகிறது. திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.
இந்த அனைத்து பணிகளையும் 2025ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டது. பன்னாட்டு அரங்கமாக இதற்கான டெண்டர் சமீபத்தில் தமிழக அரசு கோரிய நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக பொதுப்பணித்துறை விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்தால் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐந்து லட்சம் சதுர அடி பரப்பளவில் 525 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.