பதவியில் இருந்து நீக்கப்பட்ட தென்கொரிய அதிபருக்கு கைது வாரண்ட்: நீதிமன்றத்தின் உத்தரவால் பரபரப்பு

சியோல்: தென்கொரிய அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் கடந்த 3ம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறப்பட்டது. அவரச சட்டம் அமல்படுத்தியதற்காக அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர்.

அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனால் யூன் சுக் யீயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 14ம் தேதி அந்நாட்டின் இடைக்கால அதிபராக, பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திடீர் அவசரநிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் இடைக்கால அதிபருக்கு எதிராக அமைந்ததால், அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது, தென் கொரியாவின் இடைக்கால அதிபராக, துணை பிரதமரும், நிதியமைச்சருமான சோய் சாங்-மோக் நியமிக்கப்பட்டுள்ளார். தென் கொரியா நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் அந்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கொரிய ஊழல் தடுப்பு நிறுவனம் முன்னாள் அதிபர் யூன் சுக் யீயோலை கைது செய்ய கோரி நீதிமன்றத்தில் கைது வாரண்ட்டுக்கு விண்ணப்பித்து இருந்தது. தற்போது நீதிமன்றம் யூன் சுக் யீயோலை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதனால் அடுத்த ஓரிரு நாடாளில் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பதவியில் இருந்து நீக்கப்பட்ட தென்கொரிய அதிபருக்கு கைது வாரண்ட்: நீதிமன்றத்தின் உத்தரவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: