நாகப்பட்டினம்,டிச.31: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தை கலெக்டர் ஆகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 1,669 மாணவிகள் பயன்பெறுகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டம் நேற்று ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்து. உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000- உதவித் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவிகளும் பயன்பெறுவர். அதேபோல் பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. மற்ற கல்வி உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற்று வந்தாலும் (பிசி, எஸ்சி, எஸ்டி) மற்றும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தாலும் இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இத்திட்டத்தின் கீழ் உயர் கல்வி மூலம் பெறும் அறிவும், பொருளாதார சுதந்திரமும், மாணவிகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து, அவர்களது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைத் தேட ஊக்குவிப்பதோடு, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலம் 3 ஆயிரத்து 558 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் திட்டம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,669 மாணவிகள் பயன்பெற உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post நாகை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு புதுமைபெண் திட்டத்தில் பற்றட்டை appeared first on Dinakaran.