பராமரிப்பின்றி காணப்படும் பயணிகள் நிழற்குடைகள்

 

ஊட்டி, ஜன.3: நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பின்றி உள்ளன. முக்கிய சாலைகள், கிராமபுற சாலைகளில் உள்ள முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும், எம்பி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் பயணியர் நிழற்குடைகள் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பெரும்பாலான பயணியர் நிழற்குடைகள் முறையாக பராமரிப்பதில்லை. அவை குடிமகன்களின் கூடாரமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளன. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிலவற்றை தவிர, பெரும்பாலான நிழற்குடைகளுக்கு இதே கதிதான் ஏற்பட்டுள்ளது.

பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. கிராம பகுதிகளில் உள்ள பயணியர் நிழற்குடைகள் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடரமாகவும் மாறியுள்ளது. போதை தலைக்கேறும் ஆசாமிகள் உள்ளேயே அசுத்தம் செய்வதோடு காலி மதுபாட்டில்கள், டம்ளர்களை வீசி சென்று விடுகின்றனர். இவற்றோடு போஸ்டர்கள் ஒட்டி அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் பயணியர் நிழற்குடைகளை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

The post பராமரிப்பின்றி காணப்படும் பயணிகள் நிழற்குடைகள் appeared first on Dinakaran.

Related Stories: