கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை கலால் துறை அதிகாரிகள் தகவல்

 

புதுச்சேரி, ஜன. 3: புதுச்சேரி மாநிலம் தென்னிந்தியாவின் சுற்றுலா தலங்களில் முக்கியத்தும் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் உள்ளது. இதுமட்டுமின்றி மதுவிற்பனைக்கு பெயர் பெற்ற மாநிலம் ஆகும். அண்டை மாநிலமான தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் இருக்கிறது. இதனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மதுப்பிரியர்கள் புதுச்சேரி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த வாரம் நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதனால் கடந்த மாதம் 20ம் தேதி முதலே சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து விட்டனர். மேலும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாட, புதுவையில் உள்ள பல்வேறு ரெஸ்ட்ரோ பார்கள், ரிசார்டுகள் மற்றும் ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகளுடன் விதவிதமான மதுபானங்கள் அளிக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காக இந்தாண்டு 25க்கும் மேற்பட்ட புதிய மது வகைகள் அறிமுகப்படுத்தியதோடு பார்களும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தன.

இதனால் புத்தாண்டை விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மதுஅருந்தி கொண்டாட வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் புதுவையில் குவிந்தனர். இதன் காரணமாக புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ரூ.8 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை கணக்கிட முடியும். ஆனால் புதுவையில் தனியார் மதுபார்களே அதிகளவில் உள்ளதால் அதன் விற்பனையை துல்லியமாக கணிக்க முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை கலால் துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: