புதுக்கோட்டை, டிச.30: கறம்பக்குடி அருகே திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பச்சநாயகுளம் அருகே சிங்கப்பூரில் உள்ள ஐயப்பன் என்பவரது வீட்டில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி புகுந்த இரண்டு மர்ம நபர்கள் ஐயப்பனின் மனைவி தனலட்சுமி கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துவிட்டு பின்னர் ஐயப்பனின் தாயார் பாக்கியலட்சுமி அந்த வீட்டின் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை எட்டி மிதித்து எழுப்பி அவர் அணிந்திருந்த நகைகளையும் பறிக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டதால் அவரை பின்பக்க தலையில் தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
வீட்டிலிருந்து நகைகள் என மொத்தம் 47 சவரன் தங்க நகைகளையும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜசேகர் (31) என்பவரையும் அதே போல் மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் மேட்டு தெரு பொன்மேனி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (34) ஆகிய இருவரையும் கறம்பக்குடி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கைது செய்த இருவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட ராஜசேகர் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அருணா இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post புதுக்கோட்டையில் திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.