நெய்வேலி : நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி என்எல்சி ஆர்ச் விக்கிரவாண்டி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக வடக்குத்து ஆர்ச் கேட்டில் இருந்து இந்திரா நகர் எம்ஆர்கே சாலை வரை சாலையின் இரு புறத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் சாலைகளை ஓட்டிய பகுதிகளில் கட்டி விடப்பட்ட கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் வாடகை தரும் கடையின் அளவைவிட சாலையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நடுரோட்டில் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் விகேடி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல் என்எல்சி ஆர்ச் கேட் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.